செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த வெர்னிகோ மேரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்கும் என நம்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மாநில அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க அவகாசம் தேவைப்படாதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த விவகாரத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.







