‘பிஸ்லெரி’ பாட்டில் குடிநீரில் ரசாயனங்கள் – சட்ட நடவடிக்கை எடுக்க FSSAI அனுமதி!

பிஸ்லெரி நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி வழங்கியுள்ளது.

குடிநீரில் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை மீறி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வளாகத்திலிருந்து பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குடிநீர் மாதிரியில் புரோமேட் (Bromate) என்ற ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது என்பது ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்தது.

இதனால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் அந்தக் குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவை எதிர்த்து பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

இதையடுத்து குடிநீர் மாதிரி மேலாய்வுக்காக மற்றொரு உணவுப் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (Polycyclic Aromatic Hydrocarbons – PAHs) என்ற ரசாயனங்கள் கண்டறியப்பட்டன. இதன் காரணமாக இரண்டாவது ஆய்வகமும் அந்தக் குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது என அறிவித்தது.

இரண்டு ஆய்வகங்களின் முடிவுகளும் உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களை உறுதிப்படுத்தியுள்ளன. இதன் அடிப்படையில் பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு FSSAI தெரிவித்துள்ளது.இந்த சோதனை முடிவு குறிப்பிட்ட ஒரு மாதிரிக்கு மட்டுமே பொருந்தும்; அனைத்து பிஸ்லெரி பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்படவில்லை. குடிநீரில் உள்ள கிருமிகளை அழிக்க ‘ஓசோன்’ வாயு மூலம் சுத்திகரிப்பு செய்யும்போது, தண்ணீரில் இயற்கையாக உள்ள தாதுக்களுடன் அது வினைபுரிந்து ‘புரோமேட்’ என்ற ரசாயனம் உருவாகிறது.

அதேபோல், தொழிற்சாலை மாசு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மூலமாக PAHs ரசாயனங்கள் தண்ணீரில் கலக்கின்றன. இந்த இரண்டு ரசாயனங்களும் உடலில் தொடர்ந்து சேர்ந்தால் புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் கொண்டவை (Carcinogens) என்பதால், இவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது உடல்நலத்திற்கு ஆபத்தானது என எச்சரிக்கப்படுகிறது. அதேநேரத்தில் பிஸ்லெரி நிறுவனம் இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.