கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார்

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி  உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில்  ஒருவருமான உம்மன் சாண்டி தொண்டை புற்று நோயால் அவதிப்பட்டு…

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி  உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.
கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில்  ஒருவருமான உம்மன் சாண்டி தொண்டை புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதன்  காரணமாக அவர் சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவர்  திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனைத்தொடர்ந்து  பெங்களூரூ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் உயிரிழந்ததாக அவரது மகன் அறிவித்துள்ளார்.
உம்மன் சாண்டியின் மறைவுக்கும் அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விடுத்துள்ள இரங்கல்  செய்தியில், “இரண்டு பேரும் ஒரு கட்டத்தில்தான் மாணவர் வாழ்க்கையின் மூலம் அரசியலுக்கு வந்தோம்.ஒரே ஆண்டில் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.  ஒரே நேரத்தில்  பொதுவாழ்க்கையை முன்னெடுத்தோம், உம்மன் சாண்டி. திறமையான நிர்வாகியாகவும், மக்கள் வாழ்வில் நெருங்கிய ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார்” என  தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சராக  (2004-06) மற்றும் (2011-16) இரு முறை பதவி வகித்தவர் உம்மன்  சாண்டி. 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக  இருந்துள்ளார். 1970ஆம் ஆண்டு முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில்  தொடர்ந்து (1970, 1977, 1980, 1982, 1987, 1991, 1996, 2001, 2006, 2011,2016 2021)சட்டமன்ற  உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உம்மன் சாண்டியின் மறைவை தொடர்ந்து கேரளாவில் இருநாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.