இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸுக்கு இன்று முடிசூட்டப்பட்டது. இதன் மூலம் பிரிட்டனின் மன்னரானார் சார்லஸ்.
இங்கிலாந்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த, ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, தனது 96வது வயதில் மரணமடைந்தார். இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸுக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா வெஸ்ட்மினிஸ்டர் அபே பகுதியில் இன்று நடைபெற்றது.
இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி முதல் 6.30 வரை இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த விழாவில், பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னரின் அரியணையில் அமர்ந்தார். இதன் பின்னர் இங்கிலாந்து ராணியாக கமிலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்பட்டார். இவ்விழாவில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மீகன் ஆகியோரும் பங்கேற்றனர்.
இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு இருந்தது. இதனை ஏற்று, இந்திய அரசு சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டார். இதற்காக அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
மன்னரிடம் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அளிக்கப்பட்டு, அரசு அதிகாரங்களை அளிக்கும் செங்கோல் வழங்கப்பட்டது. பின்னர் நியாயம், இரக்கம் போன்ற உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தால் உருவாக்கப்பட்ட வாத்து ஒன்றும் அளிக்கப்பட்டது. அதன் பின் இறுதியாக அரசரின் தலையில் ஆர்ச் பிஷப் புனித எட்வர்ட்டின் கிரீடத்தைச் சூட்டினார்.
பின்னர் முடிசூட்டும் இருக்கையிலிருந்து எழுந்து அரியணையை நோக்கி மன்னர் சென்றார். அங்கு அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அரியணையில் அமரவைக்கப்பட்டார். பின்னர் இதே போல் அரசரின் மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது தலையிலும் கிரீடம் சூட்டப்பட்டது.
வழக்கமாக பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கப்படுவார். அங்கு அவரிடம் முறையாக அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பு விடுக்கப்படும். பொதுத் தேர்தலுக்கு முன் முறையாக அரசைக் கலைக்கும் பணியையும் அரசர் மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தை அரசர் தொடங்கி வைப்பார். பிரபுக்கள் அவையின் சிம்மாசனத்தில் அமர்ந்து அவர் ஆற்றும் உரையில் அரசின் திட்டங்களை அறிவிப்பார்.
ஒரு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது சட்டமாக மாறுவதற்கு அரசரால் முறையாக ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அரசரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக மாறாது. இந்தியா உள்ளிட்ட 56 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக புதிய மன்னர் இருப்பார். அவற்றில் 14 நாடுகளுக்கு அவர் அரசத் தலைவராகவும் இருப்பார்.








