தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று 94-வது ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக களிமேடு பகுதியில் தேர் சென்றபோது உயர் மின்அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து. இதனால், தேரில் பற்றிய தீயில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘தீப்பற்றி எரியும் இருசக்கர வாகனங்கள்’ – மத்திய அமைச்சர் விளக்கம்
படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுப்பதாக தெரிவித்துள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும், இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







