”என்னுடைய வாக்கை Value உள்ளதா மாற்றுங்கள் அண்ணா..” – விஜய் அரசியலுக்கு வர கோரிக்கை வைத்த மாணவி

”என்னுடைய ஓட்டை Value உள்ளதா மாற்றுங்கள் அண்ணா..” என விஜய்க்கு அரசியலுக்கு வர மேடையிலேயே மாணவி ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்…

”என்னுடைய ஓட்டை Value உள்ளதா மாற்றுங்கள் அண்ணா..” என விஜய்க்கு அரசியலுக்கு வர மேடையிலேயே மாணவி ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற விஜய் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

இதன் பின்னர் மாணவர்களிடம் பேசிய  நடிகர் விஜய் தெரிவித்ததாவது..

என் நெஞ்சில் குடியிருக்கும்…. தேர்வில் சாதனை படைத்த நண்பா நண்பிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம்.

அதிகமாக  இசை வெளியீட்டு விழாவில்தான் பேசி உள்ளேன். இது போன்ற நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்றுள்ளேன். தற்போது ஏதோ ஒரு  பொறுப்புணர்ச்சி வந்ததாக தோன்றுகிறது. வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்கிறேன் என்பது போல் உங்களை பார்க்கும் போது என் பள்ளிக்காலம் வந்து போகிறது.

நான் உங்களை போல் நன்றாக படிக்கும் மாணவன் இல்லை. சராசரியாக படிக்கும் மாணவன் தான். நான் ஒரு நடிகன் ஆகவில்லை என்றால் என்ன ஆகி இருப்பேன் என்ற கதையை  சொல்லி போர் அடிக்க விரும்பவில்லை, என் கனவு  சினிமா தான்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று தோன்ற காரணம் சமீபத்தில் ஒரு படத்தில் அழகான வசனம் கேட்டேன் ” காடு இருந்தால் பிடுங்கி கொள்வார்கள் , காசு இருந்தால் எடுத்து கொள்வார்கள்… ஆனால் படிப்பு மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது…. அது என்னை மிக பாதித்த வரிகளாக இருந்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டுமல்ல, இது தான் எதார்த்தமும் கூட என நடிகர் விஜய் பேசினார்.

இதன் பின்னர் பரிசுகளை பெற்றுக் கொண்ட மாணவி ஒருவர் ”விஜய் அண்ணா நீங்கள் இந்த துறை மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் கில்லி மாதிரி சொல்லி அடிக்கனும். எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே பாடலில் “நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே எனும் வரிகள் வரும். அந்த வரிகளை என் மனதில் நிலைநிறுத்தியதால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். எனது வாக்கை பயனுள்ளதாக மாற்றுங்கள் அண்ணா” என தெரிவித்தார். மாணவின் கோரிக்கைக்கு பின் அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.