ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.
ராமநாதபுரத்தில் உள்ள தனிார் பள்ளியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் பங்கேற்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்பி நவாஸ் கனி உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பரிசளிப்பு விழா நவாஸ் கனி எம்பி வருவதற்கு முன்பு துவங்கியதாக கூறப்படுகிறது. அப்போது நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வந்த நவாஸ் கனி எம்பி கோபமடைந்தார். இதுபற்றி அவர் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன், நவாஸ் கனி எம்பியை சமாதானம் செய்ய முயன்றார்.
இதற்கிடையே அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்பி நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அவர்களின் ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நவாஸ் கனி எம்பி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோரை சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே நிலைத்தடுமாறி அருகில் உள்ள இருக்கையில் விழுந்தார். இதனால் இன்னும் பரபரப்பு அதிகரித்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் மோதல் முடிவுக்கு வந்தது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்பி ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் கட்சியினர் முன்பு நடந்தது. இந்த மோதல் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ்கனி, ராமநாதபுரத்தில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு மக்களவை தொகுதி உறுப்பினரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.







