தீபாவளி ரேஸில் பின்வாங்குகிறதா சிவகார்த்திகேயனின் ‘அயலான்’?

அயலான் திரைப்படமும், ஜப்பான் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கிராபிக்ஸ் பணி நிறைவடையாததால் அயலான் படம் வெளியீட்டில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை…

அயலான் திரைப்படமும், ஜப்பான் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கிராபிக்ஸ் பணி நிறைவடையாததால் அயலான் படம் வெளியீட்டில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில்  வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தினை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சயின்ஸ் பிக்‌ஷன் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

சமீபத்தில் இப்படத்தின் ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ’ஜப்பான்’ திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் தீபாவளி ரேஸில் இருந்து ‘அயலான்’ படம் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் படக்குழு இதுவரை இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.