தேசியத் தலைநகரான டெல்லி, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் உள்பட 20 மாநிலங்களில் வரும் 27ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேசியத் தலைநகரான டெல்லியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம்,திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த சில தினங்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இமாசலப் பிரதேசத்தின் சம்பா, குலு, மாண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தெலங்கானாவில் ஏற்கனவே பலத்த மழை காரணமாக சில மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. கோதாவரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது.








