குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக் கடல் பகுதியை ஒட்டி (1.5 கிலோமீட்டர் உயரம்வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை (22.10.2021) “மதுரை, விருதுநகர், சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுதினத்தை பொறுத்த அளவில், (23.10.2021) வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும்,
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர் ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.