ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணை, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் மீது போலீசார் மேற்கொண்ட அடக்குமுறை என எதையும் மறக்கமாட்டோம் என்று பாஜகவிற்கு சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் எச்சரித்துள்ளார்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியிடம் டெல்லியில் 3வது நாளாக இன்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 3 நாட்களில் 25 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் அவரிடம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். காங்கிரஸ் கட்சியினரிடையே இந்த விசாரணை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடெங்கிலும் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டத்தின்போது அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பலர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட், சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோரும் அமலாக்கத்துறையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களும் டெல்லியில் போலீசாரால் தடுத்துநிறுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தங்கள் கட்சியினர் மீது போலீசார் கடுமையான அடக்குமுறையை கையாண்டதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தனது ஆதங்கத்தை டிவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ள சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், தற்போது நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மனதில் வைத்திருப்போம் என்றும் எதையும் மறக்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் புலிகள் என்றும் உண்மைக்காக அவர்கள் போராடி வருவதாகவும் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் தொடரும் என சூளுரைத்துள்ள அவர் எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைப்பதற்காக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார். இது போன்ற அடக்குமுறைகள் ஜனநாயகத்தில் ஒருபோதும் வெற்றியடையாது என்றும் சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.








