உக்கரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர ஏற்பாடுகளை செய்து தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மாணவர்கள் பலரால் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு இந்த பதிலை தெரிவித்துள்ளது.
அவ்வாறு தளர்வுகளை செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் படித்த இந்திய மாணவர்கள் இடையில் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர வழிவகை செய்யும் முறை தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்தில் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென போர் தொடுத்தது. 100 நாட்களுக்கும் அதிகமாக இன்னமும் போர் நீடித்து வருகிறது. போர் கடுமையாக இருந்த காலகட்டத்தில் உக்ரைனில் படித்துவந்த இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திரும்ப போராடினார். உணவு, குடிநீர் இல்லாமல் பரிதவித்தனர். இதையடுத்து, மத்திய அரசு அவர்களை அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.








