சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 155 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் , தென் சென்னையில் குறிப்பாக தாம்பரம் மூன்றாவது ரயில் முனையமாக அறிவிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்கு பயணமாகும் பயணிகளுக்கு முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவுக்கு உள்ளதா? அதை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்:
தாம்பரம் ரயில் முனையத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இரண்டு கட்டங்களாக திட்டமிடப்பட்டு, 49 கோடி ரூபாய் மதிப்பிலான முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துவிட்டன.
இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மேலும் 109 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டு, போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன.
ரயில்வே திட்டங்களைப் பொறுத்தவரை, பொருட்கள் இடம் மாறுதல், விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான இடம், அவற்றைக் கையகப்படுத்தும் போது எழும் சட்டச் சிக்கல்கள், ஓராண்டில் எவ்வளவு மாதங்கள் இடர்பாடின்றி வேலை செய்ய முடிகிறது என்பன போன்ற பல்வேறு காரணிகளை வைத்தே ஒவ்வொரு திட்டமும் எவ்வளவு விரைவாக முடிக்கப்படுகிறது என்பது நிர்ணயிக்கப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலைய கட்டமைப்பு மேம்பாட்டுப் பணியையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.








