கேரளா தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் ரூ.13.82 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை தூதரக தொடர்புள்ள எந்தவொரு கடத்தல் நிகழ்வும் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்றதில்லை என்பதால் தங்கக் கடத்தல் சம்பவம் கேரளாவை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள ஆளும் கட்சிக்கு தொடர்புடைய இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஸ்வப்னா சுரேஷ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தங்கக் கடத்தல் வழக்கில் நானும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறேன். எனக்கும் இந்த வழக்கிற்கு தொடர்பு கிடையாது. ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு (கேரள முதலமைச்சரின் முதன்மை செயலர்) இதில் தொடர்புள்ளது. இந்த முறைகேடு வழக்கில் உயரதிகாரிகளின் தலையீட்டால் என்னைப் போன்றவர்களும் மாட்டிக் கொண்டுவிட்டனர். எனது உயரதிகாரிகளின் உத்தரவை மட்டுமே நான் நிறைவேற்றினேன்.
சிவசங்கர் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். ஆனால், கேரள அரசு அவருக்கு ஜாமீன் கிடைக்க உதவியது என்று அந்தக் கடிதத்தில் சுவப்னா சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
-மணிகண்டன்