கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. இதனை அடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரசரவென குறைய தொடங்கியது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியிலிருந்து உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
கர்நாடாக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததை அடுத்து தற்போது கர்நாடக மாநிலத்தின் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த 22-ஆம் தேதி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர், தற்போது மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 177 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 2,100 கன அடியாக அதிகரித்துள்ளது. இது மேலும் படிப்படையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.







