கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டது! நீர்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலியால் 4987 கனஅடி நீர் திறப்பு!!!

தமிழ்நாட்டு அரசின் தொடர் வலியுறுத்தல்களை அடுத்து கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது.  காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை…

தமிழ்நாட்டு அரசின் தொடர் வலியுறுத்தல்களை அடுத்து கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. 

காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. இதனை அடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரசரவென குறைய தொடங்கியது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியிலிருந்து உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் எழுதினார். அதில், ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை வேகமெடுத்துள்ள நிலையில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை என்றும், மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதால், 20 நாட்களுக்கு மட்டுமே இருப்பில் உள்ள நீரை பாசனத்திற்குப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே குறுவை சாகுபடி நம்பியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய இயலும் என தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் கர்நாடக அரசு மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழ்நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடுசெய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிட உத்தரவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இதனை அடுத்து கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு போக தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணிர் திறக்கப்படும் என அண்மையில் தெரிவித்தார்.

இந்நிலையில், கர்நாடாக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததை அடுத்து தற்போது கர்நாடக மாநிலத்தின் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, கே.ஆர்.எஸ் அணைக்கான நீர் வரத்து 7914 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 2487 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அதே போன்று கபினி அணையின் நீர் வரத்து 7886 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 2500 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக மொத்தமாக கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 4987 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.