பரம்பிக்குளம் அணை மதகு உடைந்த காரணம் – முன்னாள் பொறியாளர் விளக்கம்

பரம்பிக்குளம் அணையின் கதவுகளை இயக்கவும், பராமரிக்கவும் போதுமான உதவியாளர்கள் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாக முன்னாள் பொறியாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.   பரம்பிக்குளம் அணை மதகு உடைந்தது பற்றி நியூஸ் 7 தமிழ் அறச்சீற்றம்…

பரம்பிக்குளம் அணையின் கதவுகளை இயக்கவும், பராமரிக்கவும் போதுமான உதவியாளர்கள் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாக முன்னாள் பொறியாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

பரம்பிக்குளம் அணை மதகு உடைந்தது பற்றி நியூஸ் 7 தமிழ் அறச்சீற்றம் பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு முன்னாள் பொறியாளர் இளங்கோவன் பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். தொலைபேசியில் பேசிய அவர், அணை கதவுகளை இயக்கவும் பராமரிக்கவும் நியமிக்கப்பட்ட பாசன உதவியாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறினார்.

 

மேலும், அணைக்கான இயந்திரப் பொறியாளர்கள் தற்போது பணியில் இல்லை என்றும், அடிப்படையான பல முக்கிய அம்சங்களை மேற்கொள்ளாததன் காரணமாகவே மதகு சேதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரம்பிக்குளம் அணை மதகு உடைந்ததால் பிஏவி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனக்கூறிய அவர், அணைகளின் கதவுகளை இயக்கவும் பராமரிக்கவும் பாசன உதவியாளர்கள் இருப்பார்கள். பல்வேறு காரணங்களால் இவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என கூறினார்.

புதிய வேலை ஆட்களை எடுத்தாலும் முறையான பயிற்சி இல்லை. கோவை மண்டலத்தில் 20 க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகளின் கதவுகள் மற்றும் மணற்போக்கி கதவுகளளில் ஏற்படும் சிறிய சிறிய பழுதுகளை ரப்பர்சீலிங், கிரீஸ் போன்றவைகளை சில பெரிய பழுதுகளையும் பார்க்க அரசுத்துறையின் பணிமனை இருந்தது.  அதில், பயிற்சிப்பெற்ற பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் அவ்வப்பொழுது பழுதுகளை மேற்கொள்வார்கள். இதை சீரமைக்க வேண்டும் என ரூ 90 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்து 2016ம் ஆண்டு அனுப்பினோம். அது தேவை இல்லை என உயர் மட்டத்தில் முடிவெடுத்தார்கள். இதுபோன்ற செயல்களால் மதகு சேதமடைந்துள்ளது.

வெளிப்படையான ஒப்பந்தங்கள் கோர வேண்டும். திறமையான ஒப்பந்தக்காரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பொறியாளர் பணியாளர்களை பொறியாளர் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்ற பணிகளுக்கும் அவர்களை பயன்படுத்துவதால், மதகுகளை பராமரிக்க முடியாத நிலைஏற்படுகிறது. கிருஷ்ணகிரி அணை, காவிரி முக்கொம்பு அணை, பாம்பாறு கிளை ஆற்றில் உள்ள அணைகளில் மதகு சேதமடைந்த நிலையில், தற்போது பரம்பிக்குளம் அணையில் உள்ள மதகு உடைந்துள்ளது. எனவே, அணை பராமரிப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.