எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலின்றி ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுத்ததாகக் கூறி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதிக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது நீதிபதிகள் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் , தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டே எடுக்கப்படுகின்றன என்று கருதுவதாகவும், ஆனால் ஒருதலைப்பட்சமாக முடிவெடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் பதிலைப் பரிசீலித்த பின்னர், ஒருமித்த ஒப்புதல் இன்றி ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டால், அந்த முடிவுகளைத் திரும்பப் பெறவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ நீதிமன்றம் தயங்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, விசாரணை முடியும் வரை தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்ய வேண்டும் அல்லது அதிகாரங்களை பறிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கோரிக்கை வைத்தார்.
அதற்கு நீதிபதிகள் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்ததோடு, ஞானேஷ் குமார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து உத்தரவிட்டனர்.




