’குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக ஷ்யாம் கிரிஷ்ணசாமி மீது வழக்கு பதிவு’!

கவின் படுகொலையை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சி ஷியாம் கிருஷ்ணசாமி மீது காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கவின்குமார் (24). இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் தனது காதலியை பார்ப்பதற்காக கடந்த 27.07.2025ம் தேதி பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார்.

இதையறிந்த பெண்ணின் சகோதரரான சுர்ஜித் அரிவாளால் கவினை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, கவின் படுகொலையை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த நிலையில்  அவர் மீது குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில்  திருநெல்வேலி சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக ஷியாம் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டத்தில் பேசிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.