கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம், வாக்குப்பதிவினை எத்தனை கட்டங்களாக நடத்துவது மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் ஓய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் சார்பில், கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தேர்தலை நடத்தினால், கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் எனவும் நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக எடுக்க பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் அவரச கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தற்போதைய நிலையில், தேர்தலை நடத்தக்கூடாது என்றும், அதனை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்த முறையீட்டை நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement: