தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்கு சிறுவனை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு – உதயநிதி மீது வழக்கு

தேர்தல் நடத்தை விதிகளை மீறி சிறுவனை பரப்புரைக்கு
ஈடுபடுத்தியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது
குற்றச்சாட்டு, தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் நாளை மறுதினம் அக். 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் உள்ளன.

இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அக்.3 (நேற்று) தாராபுரம் பெரியார் சிலை அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, பரப்புரை வாகனத்தில் சிறுவன் ஒருவரை ஏற்றி, அவரை பேச வைத்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுவன் தமிழக முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் பேசியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் சிறுவனை பயன்படுத்தியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாராபுரம் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.