”கொலிஜியத்திற்கு எங்களால் உத்தரவிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் எங்களால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து விக்டோரியா கவுரிக்கு எதிரான மனுவை ஏற்க மறுத்து விட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனத்துக்கு எதிராக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரிக்கப்பட இருந்த நிலையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
”வெறுப்பு பேச்சு பேசிய விக்டோரியா கவுரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும். குறிப்பாக இவர் நீதிபதியாக பதவியேற்றால் அவரது முன்பு விசாரணைக்கு வரும் வழக்குகளில் எவ்வாறு நீதி கிடைக்கும்.
மேலும் அவரது பேச்சு, அவரது கட்டுரைகள் அரசியலமைப்பு பிரிவு 21க்கு எதிராக உள்ளது. எனவே விக்டோரியா கவுரியை நீதிபதியாக பதவியேற்பது தொடர்பான அவரது தகுதிகளை ஆராய வேண்டி உள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பவர்கள் நீதிபதியாக பதவியேற்க கூடாது என்பது அடிப்படைத் தகுதி ஆனால் இந்த தகுதி கூட விக்டோரியா கவுரிக்கு இல்லை . எனவே விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதி சஞ்சீவ் கன்னா..
”உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி ஒருவரை நியமிக்கும் போது கொலிஜியம் அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளிடமிருந்து கருத்துக்களை கேட்பார்கள். அந்த கருத்துக்களும் கொலீஜியம் அமைப்பால் ஆராயப்படும். ஆனால் நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமல் இருந்திருக்குமா?. மேலும் பல்வேறு விஷயங்களையும் ஆராய்ந்து தான் கொலிஜியம் தங்களது பரிந்துரையை வழங்கி உள்ளது
நான் மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்தவனாக இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதியாக இருக்கிறேன், நீதிபதியான பின்பு அரசியல் பார்வையை வர விட்டதில்லை. விக்டோரியா கவுரிக்கும் இது பொருந்தும் தானே என தெரிவித்தார்.
இதன் பின்னர் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அரசியல் தளத்தில் இருந்து நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்ட பலரது பெயர்களை பட்டியலிட்டார். அப்போது வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், விக்டோரியா கவுரி அரசியல் பின்புலம் கொண்டவர் என்பது பிரச்சனை அல்ல மாறாக அவர் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளை பேசியவர் அவர் சிறுபான்மையினருக்கு எதிராக இருந்திருக்கிறார் என்பது தான் முக்கிய காரணம்.
நீதிபதி கிருஷ்ணய்யர் உள்ளிட்ட பலரும் அரசியல் பின்புலத்துடன் நீதிபதிகளாக இருந்துள்ளனர். அரசியல் சார்பை நாங்கள் கூறவில்லை. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் விக்டோரியா கவுரியின் செயல்பாடுகள் உள்ளன. அது தான் பிரச்சனை. விக்டோரியா கவுரி வெளிப்படையாக கூறிய கருத்துக்கள் அரசியல் பேச்சு இல்லை, ஆனால் வெறுப்புணர்வை தூண்டுபவை ” என வாதிட்டார்
மனுதாரரின் வாதத்திற்கு பதிலளித்த நீதிபதி..
”இவை அனைத்துமே கொலீஜியத்தின் கவனத்திற்கு ஏற்கனவே வந்துள்ளது. ஆனால் உரிய ஆலோசனைக்கு பின்னர் தான் கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டது. அப்படியானால் கொலீஜியத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அவர் கூடுதல் நீதிபதியாக தானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொலீஜியத்திற்கு எங்களால் உத்தரவிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் எங்களால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது” எனக் கூறி விக்டோரியா கவுரிக்கு எதிரான மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பதவிப் பிராமாணம் செய்து வைத்துக் கொண்டிருக்கும்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
– யாழன்







