அதிமுகவில் எழுந்துள்ள உட்கட்சி மோதல் எதிரொலியாக இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமையை வலியுறுத்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும், இரட்டை தலைமையை வலியுறுத்தும் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினருக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே ஏற்கனவே சட்டப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே. ஜே. கட்சியின் நிறுவனருமான பி. ஏ. ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவில் எழுந்துள்ள உட்கட்சி மோதல் விவகாரத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஜூன் 28ம் தேதி மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை என்று பி.ஏ.ஜோசப் தெரிவித்துள்ளார்.
தனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட
வேண்டுமென மனுவில் பி.ஏ.ஜோசப் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.







