பிரபலங்கள் பாராட்டு.. நன்றி தெரிவித்த இளையராஜா!

தமிழ் ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்ட இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்திற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உங்கள்…

தமிழ் ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்ட இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்திற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உங்கள் எண்ணங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசை, கலை மற்றும் கலாசாரத்தின் அழகை நம் சமூகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பு இது” என்றார்.

மற்றொரு பதிவில், “என் மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் . உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி…” என்று குறிப்பிட்டார்.

பிரபலங்கள் பாராட்டு

இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமக்கிப்பட்டுள்ள என் உயிர் தோழனுக்கு வாழ்த்துக்கள்” என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

“ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜாவை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.” என்று கமல்ஹாசன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் இந்த பதவியை ஏற்கனவே வகித்துள்ளனர்.

இந்நிலையில் மாநிலங்களவைக்கு புதிதாக 4 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை சாம்ராஜ்யம் நடத்தி மக்களை மகிழ்வித்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா, கேரளாவைச் சேர்ந்த முன்னாள் தடகள வீராங்கனையும், இந்தியாவின் தங்க மங்கை என போற்றப்பட்டவருமான பி.டி உஷா, பிரபல திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத், தர்மசாலா கோவிலின் நிர்வாகியும் சமூக சேவகருமான வீரேந்திர ஹெக்டே ஆகிய 4 பேரும் மாநிலங்களவைக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.