ஸ்மிருதி இரானி, சிந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானிக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. திரிபுரா பேரவை மூலம் மாநிலங்களவை உறுப்பினராக பதவி…

மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானிக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. திரிபுரா பேரவை மூலம் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த மாணிக் சகா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சராகிவிட்டதால், அந்த இடம் காலியாக உள்ளது. எனவே, அந்த இடத்திற்கு முக்தர் அப்பாஸ் நக்வி தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. எனினும், அவர் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் உள்ள ஒரே இஸ்லாமியரான முக்தர் அப்பா் நக்வி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் மோடியையும், கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டாவையும் சந்தித்த முக்தர் அப்பாஸ் நக்வி, அதனையடுத்தே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதேபோல், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆர்சிபி சிங்-கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து அவரும் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இருவரின் பங்களிப்பு குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முக்தர் அப்பாஸ் நக்வியின் சிறுபான்மையினர் நலத்துறை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆர்சிபி சிங் வகித்து வந்த இரும்பு துறை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, இருவருக்கும் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.