திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, 3 கார்களில் விரட்டி வந்த மர்ம கும்பல் ஒன்று, கார் ஓட்டுநரை வழிமறித்து, அடித்து உதைத்து அவரை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்யா. இவர் தனது பேத்தியுடன் காரில் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை, வீட்டின் அருகே குடியிருக்கும் ஆக்டிங் டிரைவர் சக்தி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர், உறவினர்களை சந்தித்துவிட்டு, பாக்யா மீண்டும் அம்மாபாளையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பல்லடம் அருகே சென்றபோது, இவர்களது காரை, 3 கார்கள் பின் தொடர்ந்த வந்ததை ஓட்டுநர் சக்தி பார்த்துள்ளர். எனவே, பாதைகளை மாற்றி வெவ்வேறு சாலைகளில் காரை அவர் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
எனினும் விடாது விரட்டி வந்த 3 கார்களும், செம்மிபாளையம் பகுதியில் வழிமறித்துள்ளனர். பின்னர், காரிலிருந்து ஓட்டுநர் சக்தியை வெளியே இழுத்த அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி, அவர்கள் வந்த காரில் கடத்திச் சென்றது. தகவலறிந்து சென்ற போலீசார், காரிலிருந்த சிறுமியையும், பாக்யாவையும் பத்திரமாக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே, ஓட்டுநர் சக்தியை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், ஓட்டுநர் சக்தியையும், கடத்தல் கும்பலையும் தேடி வருகின்றனர்.







