பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சொ த்துமதிப்பு அவர்களின் மனைவியர்களைவிட குறைவு என தேர்தல் ஆணையத்தில் காட்டப்பட்டுள்ள கணக்கு பாகிஸ்தானில் பேசுபொருளாகியுள்ளது.
பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அந்நாட்டு தேர்தல் ஆணையத்திடம் அவ்வப்போது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும். அந்த வகையில் ஜூன் 30, 2020ல் நிறைவடைந்த நிதியாண்டில் தங்களது சொத்து மதிப்பு குறித்து, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அந்த தகவலின்படி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைவிட அவரது இரண்டு மனைவியர்கள் பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு அதிகம். ஷெபாஸ் ஷெரீப்பின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்புபடி சுமார் 3 கோடியே 91 லட்சம். ஆனால் அவரது முதல் மனைவி நுஷ்ரத் ஷெபாஷின் சொத்து மதிப்பு 23 கோடி ரூபாய். அதாவது பாகிஸ்தான் பிரதமரைவிட அவரது மனைவிக்கு கிட்டத்தட்ட 7 மடங்கு சொத்து அதிகம்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தேர்தல் ஆணையத்திடம் காட்டியுள்ள கணக்கில் அவரிடம் சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆடுகள் இருப்பதாகவும் அதே நேரம் சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இம்ரான்கான் வங்கி கணக்கில் 60 மில்லியின் பிகேஆர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் இரண்டே கால் கோடி ரூபாய் உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அவரது மனைவி புஷ்ரா பீவியின் மொத்த சொத்து மதிப்பு 5 கோடியே 34 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சொத்துக்கணக்குகள் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.









