கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வனத்துறை மற்றும் சுற்றுலா துறையினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலான புள்ளம்பாடி வாய்க்காலில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 2,200 ஏக்கர் ஆகும். இந்த ஏரிக்கு சீசன் காலங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பறவைகளை ஆய்வு செய்த தமிழக அரசு, கடந்த 1995ம் ஆண்டு கரைவெட்டி ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது.
இந்த பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ரஷ்யா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, மங்கோலியா, கஜகஸ்தான்,நைஜீரியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து கூழக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிரும் அரிவாள் மூக்கான், சாம்பல் நிற கொக்கு, வண்ணநாரை, நாமக்கோழி, நீர்காகம், வரித்தலை வாத்து, பெரியநாரை, புள்ளிமூக்கு நாரை உள்ளிட்ட 206- க்கும் மேற்பட்ட வகையான பல லட்சத்துக்கும் மேற்பட்டபறவைகள் வருகின்றன.
இங்கு பறவைகள் தங்கியிருக்கும் காலங்களில் அவற்றுக்கு போதுமான உணவுவகைகள், தட்ப – வெப்ப நிலை கிடைப்பதே பறவைகளின் வருகைக்கு முக்கிய காரணமாகும். பல ஆயிரம் கி.மீ தொலைவிலிருந்து இங்கு வரும் சில பறவைகள் இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. இது போன்று வரும் வெளிநாட்டு பறவைகளை பார்ப்பதற்காக அரியலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள திருச்சி, தஞ்சாவூர், நாகை, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்ட மக்களும் வருகின்றனர். மக்கள் மகிழ்ந்து செல்ல இது ஒரு பொழுதுபோக்கு சுற்றுலாத்தலமாகவும் உள்ளது.
அரியலூர் மாவட்டத்தின் பொழுதுபோக்கு சுற்றுலாத்தலமாக இருக்கும் பறவைகள் சரணாலயத்தில் தூரத்தில் உள்ள பறவைகளை பார்ப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் மாடம் தற்பொழுது மிகவும் சேதம் அடைந்து முள்வேலி போட்டு அடைத்துள்ளனர். பாலம் பழுதடைந்து இருப்பதால் மேலே ஏறுவதற்கு அனுமதி இல்லை என சுவற்றில் எழுதி வைத்துள்ளனர். சீசன் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாத காலமே உள்ளதால் பார்வையாளர் மாடத்தை உடனே சரி செய்தும் மேலும் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என வனத்துறை மற்றும் சுற்றுலா துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.







