ஈரோட்டில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு-மாவட்ட தேர்தல் அலுவலர்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடையும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில்…

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடையும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில்
தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாளை மாலையுடன் தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும். தொகுதியில் உள்ள வேட்பாளர்கள், பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் பணியாற்றுவதற்காக மேலும் 4 கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளோம். பணபட்டுவாடா தொடர்பான புகார்களை நேரில் விசாரணை செய்து வருகின்றோம். குறிப்பிட்டு சொல்லும் படியான ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகின்றது. வேட்பாளர், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை மாலை முடித்துக் கொள்ள வேண்டும். தற்காலிக 107 அலுவலகங்களை நாளையுடன் அப்புறப்படுத்த வேண்டும். கண்காணிப்பு படையில் இருந்த பணியின்போது ஒழுங்கீனமாக செயல்பட்ட அதிகாரிகள் 12 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு வெயில் அதிகம் இருக்கும் இடங்களில் சாமியானா போடப்படும்.
புகார்கள் வரும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தொடர்பாக 725 புகார்கள் வந்துள்ளன.காவல் துறை மூலம் 71 வழக்குகளும், குக்கர் கொடுத்தது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்வதற்கு
உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக மூலம் 13 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ஓட்டுகள் இல்லை என சி.வி.சண்முகம் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், சுவராசியம் என்னவென்றால் என்னுடைய ஓட்டும், எனது மனைவியின் ஓட்டும் இல்லை என அதிமுகவினர் எழுதிக் கொடுத்துள்ளனர். உண்மையில் அப்படி இல்லை. உரிய விளக்கம் கொடுத்துள்ளோம். நாம் தமிழர் பி்ரச்சாரத்துக்கு தடை என்று எதுவும் இல்லை என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.