104 சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் உதவி கிடைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
இந்தியா கொரோனா பரவலின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைத் தினத்தில் 200 பேருக்கு மேற்பட்டவர்கள், கொரோனா பாதிக்கப்பட்டு தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு அமலில் இருந்தது. மேலும் வரும் திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘ கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க 12 சித்தா மையங்கள் உருவாக்கப்பட உள்ளது. லேசான அறிகுறிகளுடைய கொரோனா நோயாளிகளுக்கு இங்குச் சிகிச்சை வழங்கப்படும். மேலும் அனைவரும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளைக் கேட்பது சரியாக இருக்காது. மருத்துவர்களின் வலியுறுத்தலின் பெயரில் ஆக்சிஜன் படுக்கைகள் வழங்கப்படும். மேலும் 104 எண்ணுக்கு அழைத்தால், உடனடியாக ஆக்சிஜன் வழங்கப்படும்’ என்று அவர் கூறினார்.







