கரூர் அருகே தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில், ஒரு மாதத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்களம், பாலராஜபுரம், ரெங்கநாதபுரம், சுக்காலியூர், பஞ்சமாதேவி, புலியூர் ஊராட்சிகளுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். அறுவடை பணிகளும் நிறைவடைந்த நிலையில், புலியூரையடுத்த உள்வீரராக்கியம் மாரியம்மன் கோயிலில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், அங்கு முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்காலிக கொள்முதல் நிலையம் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலைச் சுற்றி, நெல் மூட்டைகள் குவித்து அடுக்கப்பட்டும், தரையில் நெல்மணிகள் கொட்டி மூடப்பட்டும் உள்ளது. எங்குத் திரும்பினாலும் நெல் மூட்டைகளைக் காணும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு தாங்களே பொறுப்பு என அதிகாரிகள் கூறியுள்ளதால், அவற்றைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், இதனால் வேறு பணிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, நெல் கொள்முதலை விரைந்து துவங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.








