திருமயம் அருகே கடியாப்பட்டியில் சித்திரை திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இரு புறத்திலும் நின்று ஆரவாரத்துடன் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு போட்டியிட்டன.
இப்போட்டி பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் ஏழு ஜோடி மாட்டு வண்டிகளும் சிறிய மாடு பிரிவில் 13 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.
பெரிய மாட்டு வண்டி களுக்கு 12 கிலோமீட்டர் தூரம் வெற்றி இலக்காக நிர்ணயக்கப்பட்டது. சிறிய மாட்டு வண்டி களுக்கு 9 கிலோமீட்டர் தூரம் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது.
விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று போட்டியை ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்.
இரண்டு பிரிவுகளாக நடைப்பெற்ற இந்த போட்டியில் முதல் பரிசு 50,001 ரூபாயை புதுக்கோட்டை மாவட்டம் விராமதி பிரகன்யா மோகன் என்பவரது மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசு 40,001 ரூபாயை புதுக்கோட்டை மாவட்டம் கே புதுப்பட்டி கே. அன்பாள் என்பவரது மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசு 30,001 ரூபாயை மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மாட்டு வண்டியும், நான்காவது பரிசு 20,001 ரூபாயை மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டி சேர்ந்த சிங்கம் மாணிக்கம் என்பவரது மாட்டு வண்டியும் பரிசுகளை தட்டி சென்றது.
இறுதியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.







