திருப்பூர் மாநகராட்சியில் மக்களின் குறைகளை கேட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மக்களுடன் மேயர் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை மேயர் தினேஷ்குமார் தாக்கல் செய்தார். திருப்பூர் மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மேயரால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநகராட்சியின் வருவாய் ஆயிரத்து 558 கோடியே 54 லட்சம் ரூபாயாகவும், செலவினம் ஆயிரத்து 568 கோடியே 63 லட்சம் ரூபாயாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாநகராட்சியின் வருவாய் பற்றாக்குறை 10 கோடியே 9 லட்சம் ரூபாயாக உள்ளது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மேயர் தினேஷ் குமார், திருப்பூர் மாநகராட்சியில் AMRUT திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப்பணி 74% நிறைவடைந்துள்ளதாகவும், நடப்பு ஆண்டிலேயே இக்குடிநீர் திட்டத்தினை செயலாக்கத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நொய்யல் நதிக்கரையின் இருபுறமும் வஞ்சிபாளையம் முதல் காசிபாளையம் வரை புதிய சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மேயர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
பேருந்து நிலையங்கள், மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் WIFI வசதி செய்யப்படும் என்றும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கோவில்வழி என்ற பகுதியில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: ‘மனமுவந்து சொத்து வரி உயர்த்தப்படவில்லை’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் மேயர் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மக்களுடன் மேயர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மேயர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
முன்னதாக, கூட்டத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்துவந்த அதிமுக உறுப்பினர்கள், சொத்துவரி மற்றும் குப்பை வரி உயர்வுக்கு எதிராக மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர். அப்போது திமுக அதிமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டபடி வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும், சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு காரணம் என்பதை ஏற்க முடியாது எனக்கூறி வெளிநடப்பு செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: