உழைப்பாளர் தினமான இன்று, கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், வசீகர குரலாலும், எழில்மிகு தோற்றத்தாலும் உலகையே கவர்ந்திழுத்து ஒன்றிணைத்த இளைஞர் படையை பற்றி விரிவாக காணலாம்….
தென்கொரியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு, ’பிக் ஹிட்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ பாங் சி ஹியுக், ராப் மான்ஸ்டர் எனும் புனைப்பெயர் கொண்ட ராப் பாடகர் கிம் நம் ஜூனுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டு, புதிய இசைக்குழுவை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். கிம் சொக் ஜின், மின் யூங் கி (சுகா), ஜே-ஹோப் (ஜங் கோ சொக்), பார்க் ஜி மின், கிம் டே ஹியுங், ஜொன் ஜங் கூக் ஆகிய 6 பேர் அந்த இசைக்குழுவுக்கு தேர்வாகின்றனர். ராப் மான்ஸ்டரை தலைவராகக் கொண்ட இந்த இசைக்குழு BTS (பாங்க்டான் சொன்யோதான்) எனும் பெயரைப் பெறுகிறது.
உறுப்பினர்கள் அனைவருமே பதின் பருவத்தினர். பல விஷயங்களை நினைத்து குழப்பம் கொள்ளும் அந்த வயதில், தன்னுடைய லட்சியத்தை நோக்கி ஓடத் தொடங்கினர். இவர்கள் அனைவருமே மிகுந்த செல்வாக்கும், வசதியும் உடைய பின்புலத்தை கொண்டவர்கள் அல்ல. சிலரது வீட்டில் எதிர்ப்புகள் இருந்தபோதும், இசையின் தாகம் அவர்களை வாட்டி வதைத்தது.
பிக் ஹிட் நிறுவனத்தின் தயாரிப்பில் BTS, 2013 ஆம் ஆண்டு ’நோ மோர் ட்ரீம்’ எனும் தனது முதல் பாடலை வெளியிட்டது. வெற்றிகரமாக கே-பாப் உலகில் கால்பதித்த இந்த இளைஞர் படைக்கு அப்போது தெரியவில்லை, பல கஷ்டங்களும், வேதனைகளும் காத்திருக்கிறது என்று. பிக் ஹிட் நிறுவனம் வீழ்ச்சி அடைய தொடங்கியது. பொருளாதார ரீதியாக பின்னடைவுகளை சந்தித்தது பிக் ஹிட். இதனால் இரவும்-பகலுமாக பயிற்சி மேற்கொண்டது BTS. தனது நிறுவனத்தை வீழ்ச்சியின் பாதையிலிருந்து மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
தங்களது இசைக்கச்சேரியைக் காண சாலைகளில் நின்று, நோட்டீஸ் கொடுத்து மக்களை அழைத்தனர். கச்சேரிகளை நடத்த வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும்போது, 7 பேரும் ஒரே ஒரு குறுகிய அறையை பகிரும் அவலத்தையும் சந்தித்தனர். இவ்வாறு கடினமாக உழைத்த BTS-ன் முயற்சிகள் அனைத்தும் பெரிதளவிலான பயன்களை அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் BTS இசைக்குழுவை கலைத்து விடலாம் என்ற யோசனை, பொருளாதாரத்தில் பின்னோக்கி பயணித்த பிக் ஹிட் நிறுவனத்தை சுற்றி சுற்றி வந்தது.
இது ஒருபக்கம் இருக்க பிரபலங்கள் சந்திக்கும் உருவ கேலிகளுக்கும் BTS விதிவிலக்கல்ல. இருப்பினும் மற்ற தென்கொரிய இசைக்குழுக்களைப் போல், காதல், காதல் தோல்வியை மட்டுமே மையமாகக் கொண்டு பாடல்களை தராமல், இளைஞர்கள் சமுதாயத்தை காயப்படுத்தி, அவர்களை கவலைக்கு உட்படுத்தும் சமூகப் பிரச்னைகளை கருவாகக் கொண்டு, அந்த பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலை தனது பாடல்களில் வெளிப்படுத்தினர். ஒரு வரைமுறையோடு தங்களைத் தாங்களே செதுக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து பல்வேறு இன்னல்களையும், கடினமான காலங்களையும் எதிர்கொண்ட BTSக்கு 2015 ஆம் ஆண்டு உத்வேகமும் முன்னேற்றமும் கொடுத்தது. தி மோஸ்ட் பியூட்டிஃபுல் மொமண்ட் இன் லைஃப் எனும் ஆல்பத்தில் இடம்பெற்ற ’ஐ நீட் யு’ என்ற பாடல், பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்த பாடல், BTS இசைக்குழு கலைக்கப்படுவதிலிருந்து காத்தது.
மொழித் தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து உலகம் முழுவதும் BTS-ன் முகம் தெரியத் தொடங்கியது. இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும், உத்வேகத்தையும் தரும் பாடல்களை கொடுக்கும் உன்னத நோக்கத்திலிருந்து BTS விலகவில்லை. விமர்சகர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்காமல், கடின உழைப்பால் வெற்றி கண்டு, அந்த விமர்சனங்களை தகர்க்க வேண்டும் என்று உலகிற்கு உணர்த்தியது. அன்பின் பாதையை மக்களுக்கு புடமிட்டுக் காட்டியது. தொடர்ந்து கருத்துமிக்க பாடல்களை தந்து உலகளவில் இளைஞர் பட்டாளத்தை சம்பாதிக்கத் தொடங்கியது.
சமூக வலைதளங்களில், BTS-க்கு ஆதரவாகவும், அவர்களின் பாடல்கள் தங்களுக்கு ஆறுதலை அளிப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, BTS தனது பாதையை மேலும் மேலும் உறுதியாக கட்டமைத்தது. டோப் , பிளட் ஸ்வெட் அண்ட் டியர்ஸ், மைக் ட்ராப், ஃபயர் என வரிசையாக பாடல்கள் ஹிட் அடிக்க, 2018 ஆம் வெளியான ஃபேக் லவ் பாடலை உலகமே கொண்டாடியது. இதன்பின்னர் BTS-க்கு பொற்காலம் தான். சமூக வலைதளங்களும் கைகொடுக்க, புகழின் உச்சிக்கே BTS சென்றது. ஆங்கிலத்தில் வெளியான டைனமைட், பட்டர், பெர்மிஷன் டு டான்ஸ் ஆகிய பாடல்கள் தொடர் வெற்றியை BTS-க்கு அளித்தது.
BTS உறுப்பினர்களின் உடல் தோற்றங்களும், சிகை, உடை அலங்காரங்களும் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அனைவரும் விரும்பும் ஒன்றாக மாறியது. இதனால் BTS பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்தது. கின்னஸ் சாதனை புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பிடித்தது. தன்னுடையே தாய்நாட்டை உலகளவில் பிரபலப்படுத்தியது.
ஆர்மி என்று அழைக்கப்படும் BTS-ன் ரசிகர்கள், உலகளவில் சிறந்த ரசிகர்கள் என்ற சிறப்பையும் பெற்றுள்ளனர். இன்று வரை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றனர். பல்வேறு இன்னல்களில் இருந்து முன்னேறி வந்ததால், உலகளவில் கஷ்டப்படும் பல தரப்பு மக்களுக்கும் பொருளாதார ரீதியாக BTSம், அதன் நிறுவனமான பிக் ஹிட் (அ) ஹைப் உதவி வருகிறது.
தென்கொரிய சட்ட விதிகளின் படி, அந்நாட்டு இளைஞர்கள் கட்டாய ராணுவ பயிற்சி மேற்கொண்டு, இரண்டு ஆண்டுகள் ராணுவப் பணியாற்ற வேண்டும். அதன்படி இக்குழுவின் ஜின் மற்றும் ஜே-ஹோப் ராணுவப் பயிற்சிக்காக சென்றுவிட்ட நிலையில், மற்ற உறுப்பினர்களும் விரைவில் ராணுவப் பயிற்சிக்காக செல்ல உள்ளனர். இதன் காரணமாக ஒவ்வொருவரும் சோலோ ஆல்பங்களை வெளியிட்டு வருகின்றனர். BTS இசைக்குழுவின் 7 உறுப்பினர்களும் மீண்டும் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், காட்சி தருவார்கள் என்று ஆர்மி எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.
BTS உழைத்த உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் ஏராளம். அடுக்கிக்கொண்டே செல்லலாம். தங்களது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் முன்னேற்றம் கண்ட BTS, இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் என்றால் அது மிகையல்ல…..







