குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தன்கருக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அதன் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இன்னும் 3 நாட்களில் தேர்தல்:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவின் பதவிக் காலம் வரும் 10ம் தேதியோடு முடிவடைய உள்ளதை முன்னிட்டு, தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜக்தீப் தன்கருக்கு மாயாவதி ஆதரவு:
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தன்கரை, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என்று அதன் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதில் ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாமல் போனதை சுட்டிக்காட்டி உள்ளார்.
இதன் காரணமாகவே நாட்டின் மிக உயரிய பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதிலும் அதேபோன்ற சூழல் நிலவுவதாகவும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் மற்றும் எதிர் தரப்புக்கு இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழலில், பொது நலன் கருதியும், கட்சி நலன் கருதியும் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஜக்தீப் தன்கரை ஆதரிக்க தங்கள் கட்சி முடிவெடுத்துள்ளதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவரின் முக்கியத்துவம்:
இந்திய அரசியல் சாசனத்தில் குடியரசுத் தலைவருக்கு அடுத்த இடம், குடியரசு துணைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் இந்திய அரசின் முதல் தலைவர் என்றால், குடியரசு துணைத் தலைவர் இந்திய அரசின் இரண்டாவது தலைவர். அதோடு, குடியரசு துணைத் தலைவர்தான் மாநிலங்களவையை வழிநடத்தும் தலைவர்.
யார் வாக்காளர்கள்:
குடியரசு துணைத் தலைவரை தேர்தெடுப்பவர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்கள். இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 788 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான், தேர்தலில் வாக்களித்து குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள். வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு மட்டுமே உண்டு. மக்களவை உறுப்பினர்களாக இருந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தாலும் அனைவருக்கும் சமமான மதிப்பு வாக்கு கொண்டதாக அந்த வாக்கு இருக்கும்.
தேர்தல் அட்டவணை:
2022ம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூலை 5ம் தேதி வெளியிடப்பட்டது. வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.