மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம்
கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு
ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால், காவிரிக் கரையில் உள்ள 11
மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த ஜூலை 17-ஆம் தேதி எட்டியது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேட்டூர் அணையிலிருந்து நேற்று காலை 51 ஆயிரம் கன அடி நீர் உபரி நீராக
வெளியேற்றப்பட்டது. இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது ஒரு
லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை மின்
நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும், உபரி நீர்
போக்கியான 16 கண் மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 17 ஆயிரம் கன அடி நீரும்
வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளதால் காவிரிக் கரையில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆடிப் பெருக்கு நாளில் காவிரிக் கரையெங்கும் மேட்டூர் தொடங்கி பூம்புகார் வரை
பல லட்சக்கணக்கான பொதுமக்கள் புனிதநீராடுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. தற்போது காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆற்றில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரிக் கரைகளில் தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா