புதுக்கோட்டை அருகே தங்கையின் திருமணத்திற்கு வந்த தங்கையின் தோழியை மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அண்ணனை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை, கீரனூர் அருகே உள்ள சூசைபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் சிவா (28). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது தங்கையின் திருமணம் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மணப்பெண்ணின் தோழி கரூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் வந்துள்ளார்.
நார்த்தாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு சூசைப்புடையான்பட்டி கிராமத்திற்குச் சென்றுள்ளார். சிவா அந்தப் பெண்ணிற்கு குளிர்பானத்தில் பீர் கலந்து கொடுத்துள்ளார். சற்றுநேரத்தில் மயங்கிய அந்தப் பெண்ணை மறைவாக உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்து அந்தப் பெண் பதற்றத்துடன் சிவாவின் பிடியிலிருந்து தப்பி வந்து உறவினரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் இது குறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் லதா விசாரணை செய்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிவா மீது வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர், புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருமண நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








