” மணிப்பூரில் இணைய சேவையை கொண்டு வருவதன் மூலம் தவறான தகவல் பரவி நிலைமை மேலும் மோசமாகிவிடும்” என மணிப்பூர் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்த நிலையில் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவையை மீண்டும் கொண்டு வரவும் இணையதள சேவையை துண்டித்ததை உடனே திரும்ப பெறவும் உத்தரவிட்ட மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மணிப்பூர் மாநில அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க மணிப்பூர் மாநில அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இதன் அடிப்படையின் இன்று விசாரணை நடைபெற்றது.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் “மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ச்சியாக நிலவரம் மாறிவருகிறது. எந்தவொரு தவறாக தகவலும் மணிப்பூரின் நிலமையை மேலும் மோசமடைய செய்யும். தற்போது மத்திய அரசின் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் நிலைமை சீரடைந்து வருகிறது” என வாதங்களை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பதிலளித்த நீதிபதிகள் ” மணிப்பூர் விவகாரம் தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளார். எனவே அதனை தீர ஆராய வேண்டும், எனவே நாளை விசாரிக்கலாம்” என தெரிவித்தார். மேலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும், யோசனைகளையும், பரிந்துரைகளையும் நாளை வழங்குங்கள் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் கோன்சால்வ்ஸ் ” கடந்த மே மாதத்தில் வன்முறையால் 10 பேர் இறந்தனர், ஆனால் தப்போது வன்முறைக்கு 110 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அரசின் ஆதரவோடு ஒரு சில தீவிரவாத பிரிவினர் பொதுவெளியில் ஆயுதங்களை கையிலேந்தி செல்கின்றனர், அவர்கள்தான் வன்முறைக்கு காரணமானவர்கள்” என தெரிவித்தார்.
இதற்கு பதலளித்த தலைமை நீதிபதி ”உங்களது சந்தேகம் மற்றும் யூகத்தின் அடிப்படையில் அங்குள்ள சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையிட முடியாது. ஏனெனில் இந்த நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையின் பேரில் மீண்டும் வன்முறைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடக்கூடாது. இந்த விவகாரத்தை மிகவும் கவனமாக அனைத்து கோணங்களிலிருந்தும் அணுக வேண்டும். மேலும் இது நீதிமன்றம் தான் என்பதை மறந்துவிடக்கூடாது, நாம் சட்டம் ஒழுங்கை நடத்த ஆரம்பித்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் எதற்காக ? மேலும் மக்கள் அவதிப்படக கூடாது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.







