முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்த நாளன்று தொடங்கி வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலமாக 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். இந்தத் திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவை சமைத்து, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உப்புமா, கோதுமை ரவா, வெண் பொங்கல், கிச்சடி உள்ளிட்டவை காலை சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்க உள்ளார். காலையில் மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு, மாலையில் விருதுநகரில் திமுக சார்பாக நடைபெறும் முப்பெரும் விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







