கால்பந்தில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்று அசத்திய பிரேசில்

டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி,  பிரேசில் அணி தொடர்ந்து 2வது முறையாக தங்கப்பதக்கம் வென்றது.    டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியில் பிரேசில், ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அரையிறுதியில்…

டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி,  பிரேசில் அணி தொடர்ந்து 2வது முறையாக தங்கப்பதக்கம் வென்றது. 

 

டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியில் பிரேசில், ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அரையிறுதியில் பிரேசில் அணி மெக்சிகோவையும், ஸ்பெயின் அணி ஜப்பானையும் வீழ்த்தி இருந்தது. இரு அணிகளும் வலுவாக காணப்பட்டதால் தொடக்கம் முதலே போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

முதல் பாதியின் இறுதியில் பிரேசில் அணி வீரர் குன்ஹா கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 61வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் மிகேல் ஓயர்ஸபால் கோல் அடித்து சமன் செய்தார். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தில் மாற்று வீரராக களம் கண்ட பிரேசில் அணியின் மால்கம், கோல் அடித்து ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்பும் முயற்சிகளுக்கு பிரேசில் அணி வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர். இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்ற தங்கப்பதக்கத்தை வென்றது. ஸ்பெயின் அணி வெள்ளிப்பதக்கத்துடன் விடைபெற்றது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் நட்சத்திர வீரர் நெய்மர் தலைமையிலான பிரேசில் அணி தங்கப்பதக்கம் வென்றிருந்தது. இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரேசில் அணி தங்கப்பதக்கத்தை தன்வசமாக்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் மெக்சிகோ அணி ஜப்பானை வீழ்த்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.