தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிப்பதற்கான அலுவல் ஆய்வு குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், வரும் 13-ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும், 14-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் காகிதமின்றி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனையொட்டி அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவைச்செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், வரும் பத்தாம் தேதி காலை 11 மணிக்கு அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் நிதி நிலை அறிக்கைக்காக கூடும் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துடன், மானிய கோரிக்கை மீதான விவாதங்களை நடத்துவதா அல்லது பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையை மட்டும் தாக்கல் செய்துவிட்டு மானிய கோரிக்கை மீதான விவாதங்களை பின்னர் நடத்துவதா என்றும் ஆலோசிக்கப்பட உள்ளது.







