சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.  முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும்,  ஹாசன் மக்களவைத் தொகுதியின்…

பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும்,  ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.  அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  அதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.  அதன்படி,  பிரஜ்வல் ரேவண்ணாவைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.  இதற்கிடையே,  பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே,  பிரஜ்வல் ரேவண்ணா மே 31-ம் தேதி எஸ்.ஐ.டி. முன்பு ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று வீடியோ ஒன்றை மே 27ம் தேதி வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் கர்நாடக மக்கள் மற்றும் தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.  பிரஜ்வல் ரேவண்ணா மே 30ம் தேதி நாடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியானதால் அவரை  விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்ய கார்நாடக காவல்துறையினர் திட்டமிடப்பட்டிருந்ததது.

இதனிடையே,  பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில்  இன்று காலை கைது செய்யப்பட்டார்.  ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.  இந்த நிலையில்,  பிரஜ்வல் ரேவண்ணா இன்று பிற்பகல் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.