கடலூர் அருகே பலாப்பழமும், குளிர்பானமும் சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வேல்முருகன் இவருக்கு மனைவி மற்றும் 8வயதில் மகள் இனியாவும், 6 வயதில் மகன் பரணிதரன் ஆகியோர் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நேற்று முன்தினம் மகன் பரணிதரன் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகிய மூவரும் வீட்டில் சாம்பார் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டனர். பின்னர் உடனேயே பலாப்பழமும் சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மூவரும் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்தான். தாய் மற்றும் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.