‘சந்திரமுகி 2’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் சிலர் கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் விநாயகர் சதுர்த்தியை(செப்.15) அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவில் படத்தின் கதாநாயகன் ராகவா லாரன்ஸ், வடிவேலு, இயக்குனர் வாசு மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின்போது ஆடியோ வெளியீட்டு விழாவை காண வந்திருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும், அங்கிருந்த பவுன்சர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பவுன்சர்கள் அந்த மாணவரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ”சந்திரமுகி-2 ஆடியோ வெளியிட்டு விழாவின்போது, கல்லூரி மாணவர் ஒருவருடன் பவுசன்கர்கள் கைகலப்பில் ஈடுபட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. முதலில் இந்த சம்பவம் அரங்குக்கு வெளியே நடந்ததால், நானோ அல்லது ஏற்பாட்டாளர்களோ இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை.
https://twitter.com/offl_Lawrence/status/1695720947930820782?t=UZs51TUvkMAbC-5jP6CLAA&s=08
மாணவர்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதும் அவர்கள் வளர வேண்டும் என்று நான் விரும்புவதும் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எப்போதும் எதிரானவன். நாம் செல்லும் எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். காரணம் எதுவாக இருந்தாலும், ஒருவரை அடிப்பது என்பது கண்டிப்பாகத் தவறு. அதிலும் ஒரு மாணவருக்கு இது நடந்திருக்கக் கூடாது.
அந்த நேரத்தில் நடந்ததற்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற செயல்களில் இனிமேல் பவுன்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு லாரன்ஸ் அப்பதிவில் கூறியுள்ளார்.







