புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் மதுபாட்டில் போட்டுக் கொடுத்த திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 28-ம் தேதி சென்னையைச் சேர்ந்தவருக்கும் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடையும் வகையில், மணமகன் வீட்டார் தரப்பில் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய், பழம், வெத்தலை, பாக்கு ஆகியவற்றுடன் மதுபாட்டிலும் இருந்தது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வரும் சூழலில் இந்த செயல் பல கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் , மதுபானம் வழங்கிய மணமகன் வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து புதுச்சேரி மாநில கலால்துறை உத்தரவிட்டுள்ளது.







