இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் கோர பிடியில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளவில்லை. பொருளாரத்தை மீட்டெடுப்பதற்காக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை உருவெடுத்துள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண கொரோனாவை விட இந்த உருமாறிய கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது. இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய கொரோனா பரவல் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் மீண்டும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் இந்த ஊரடங்கிற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விளக்கமளித்துள்ளார்.







