மேற்கு வங்கத்தில் சக வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட நாகையைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேற்கு வங்கத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றிய நாகை மாவட்டம் கீழையூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த ஞானசேகரன், சக வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். அவரது உடல் மேற்கு வங்கத்திலிருந்து விமானம் மூலமாகக் கோவை வழியே நாகை மாவட்டம், கீழையூருக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட ஞானசேகரன் உடலுக்கு ஈசனூர் கல்லறைத் தோட்டத்தில் 21 குண்டுகள் முழங்க எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் ராணுவ மரியாதை அளித்தனர். நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் காவல் துறை சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.








