முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

காமெடி நடிகர் டூ பஞ்சாப் முதலமைச்சர் – யார் இந்த பகவந்த் மான்?


ஆறுமுகப்பாண்டி. தி.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நாட்டிலேயே முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளரை சற்று வித்தியாசமான முறையில் தேர்வு செய்தது என்றுதான் கூற வேண்டும்.

பொதுமக்களிடம் இலவச அலைபேசி எண் அறிவித்து அதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தி பக்வந்த் மான் என்பவரை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பக்வந்த் மான் பற்றிய தகவல்களை விவரிக்கிறது இந்த கட்டுரை தொகுப்பு.
பக்வந்த் மான் 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் ஷீமா மண்டிக்கு அருகில் உள்ள சதோஜ் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை மகிந்தர் சிங் அரசு ஆசிரியர். தாய் ஹர்பால் கெளர்.

ஆசிரியரின் மகனான இவரை அவரின் தந்தை ஆசிரியராக்கி பார்க்கவேண்டும் என்றே ஆசை பட்டார். ஆனால் மானின் விருப்பம் வேறு மாதிரி இருந்தது. பஞ்சாப் மக்கள் மத்தியில் ஓர் அரசியல்வாதி என்பதை விட, நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் பக்வந்த். கல்லூரி பருவத்தில் இருந்தே ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை மேம்படுத்தி கொண்டவர்.


கல்லூரி நிகழ்ச்சிகளில் காமெடி ஷோக்களில் பங்கேற்றதன் பலன் அவருக்கு அது தொழிலாகவே மாறிப்போனது. நாளைடைவில் அதுவே அவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை கொண்டு சென்றது.

பக்வந்த்தின் தனிச் சிறப்பு அவரின் அரசியல் நக்கல் நிறைந்த காமெடிகள் தான். பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலின் நடப்பு நிகழ்வுகளை மக்கள் முன்னிலையில் காமெடியாக நடித்து காண்பிப்பதில் வல்லவர். இந்த மாதிரியான அணுகுறை அவரை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது என்றுதான் குறிப்பிட வேண்டும்.

கல்லூரி நாட்களில், இடதுசாரிகளின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டபோதிலும் அவர் எந்தக் கட்சியிலும் உறுப்பினராகவில்லை. 2011 மார்ச் மாதம் மன்பிரீத் பாதல் பஞ்சாபில் மக்கள் கட்சியை உருவாக்கியபோது பக்வந்த் மான் அரசியலில் களம் கண்டார். பஞ்சாப் மக்கள் கட்சியின் (பிபிபி ) நிறுவனத் தலைவர்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து, 2012-ம் ஆண்டு மக்கள் கட்சி சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

பின்னர், 2014-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறி டெல்லியில் ஆட்சியை பிடித்த அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அதே ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சங்ருர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
அந்த தேர்தலின்போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. ஆனால், பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதியில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதே நேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


சிரோமணி அகாலி தளம் – பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தவிர, மூன்றாவது கட்சியில் இருந்து சங்ரூரில் மீண்டும் வெற்றி பெற்று மக்களவைக்கு வந்த ஒரே தலைவர் பக்வந்த் மான் மட்டுமே. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவராக பக்வந்த் மான் உருவெடுத்தார்.

அரசியல்வாதிகள் மீது ஊழல், உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, பணமோசடி போன்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், அரசியல் பயணம் தொடங்கியது முதல் கடந்த 10 ஆண்டு காலத்தில், பக்வந்த் மான் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டு என்பது மது அருந்தினார் என்பதுதான்.

அவரின் இந்த மதுப்பழக்கம் அவரை நிறைய சர்ச்சைகளை சந்திக்க வைத்தது. பல முறை குடித்துவிட்டு பொதுவெளியில் அவர் தள்ளாடி செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளன. சில ஆண்டுகள் முன் ஆம் ஆத்மியின் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து, இனி மது அருந்த மாட்டேன். பஞ்சாப் மக்களுக்காக உழைக்க இனி எனது நேரத்தை ஒதுக்குவேன் என்று சத்தியம் செய்தார் பக்வந்த்.

இதுமட்டுமல்லாது, நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு விஷயங்களை வீடியோ எடுத்த விவகாரம், மனைவியை பிரிந்த விவகாரம் என பக்வந்த் மீதான சர்ச்சைகள் ஏராளம். இந்த சர்ச்சைகளை தாண்டி கெஜ்ரிவால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முக்கிய காரணம் அவரின் அரசியல் செயல்பாடுகள். கடந்த சில தேர்தல்களில் பக்வந்த் செயல்பாடுகளால் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.

நடந்து முடிந்துள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது மாநிலமாக பஞ்சாப்பில் ஆட்சியமைக்கிறது. மக்களால் தேர்தலுக்கு முன்பே தேர்வு முதல்வர் வேட்பாளராக செய்யப்பட்ட பக்வந்த் மான் புதிய முதல்வராக பதவியேற்க இருக்கிறார். கட்சி மற்றும் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காமன்வெல்த்; பதக்கத்தை உறுதி செய்த பவினா பட்டேல்

G SaravanaKumar

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற 46 பேர் கைது

Web Editor

சீர்காழி மழைவெள்ளம்; முதலமைச்சர் நாளை நேரில் ஆய்வு

G SaravanaKumar