சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மதுரை ரயில் நிலையத்திற்கு வாட்ஸ்அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா பரவலை குறைக்க தமிழ்நாடு முழுவதும் மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என பொது போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரயில்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. அவசர காரணங்களுக்காக செல்லும் பயணிகள் ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரு ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் மற்றும் மதுரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் மதுரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். முழுவதும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபரை பிடித்த காவல் துறையினர், அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.







