சகோதரி செல்வதைத் தடுப்பதற்காக, சென்னையில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரைப் பிடித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து துபாய் செல்வதற்காக 163 பயணிகளுடன் இண்டிகோ விமானம் இன்று காலை புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, 100 எண்ணுக்கு ஒரு தொலைபேசித் தகவல் வந்தது. அதில் துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனவும் ஒரு மிரட்டல் வந்தது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர். இதன் காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
குடிபோதையில் மர்ம நபர் ஒருவர் 100க்கு போன் செய்ததாகத் தெரியவருகிறது. மிரட்டல் வந்த போன் நம்பரை அறிந்து அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டனர். இதற்கிடையே மிரட்டல் விடுத்தவரின் தங்கை மற்றும் உறவினர்கள் துபாய் செல்ல இருப்பதாகத் தெரியவந்துள்ளது. விமானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தனது சகோதரி துபாய் செல்வதை தடுப்பதற்காக விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியது தெரியவந்தது. மிரட்டல் விடுத்தவர் பழைய வண்ணாரப்பேட்டையை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (41) என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-ம.பவித்ரா








